Type Here to Get Search Results !

வைகை அணையில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி... முறைகேடுகளைத் தடுக்கக் கோரி அதிகாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு..!

theni today News 0

 வைகை அணையில்  வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி... முறைகேடுகளைத் தடுக்கக் கோரி அதிகாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு..!



​தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 1958-ம் ஆண்டு  முன்னாள் முதல் - அமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட வைகை அணை, தென் தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கி வருகிறது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 65 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை தூர்வாரப்படாத நிலையில், சுமார் 15 அடி ஆழத்திற்கு வண்டல் மண் படிந்துள்ளதால் அணையின் நீர்ப்பிடிப்புத் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனைத் தூர்வார அரசு மேற்கொண்ட ஆய்வுகளில் செலவு பல கோடிகளைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மாற்றாக அணையில் தேங்கி இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், அணையை தூர்வாரி அதன் மூலம் வருவாயை ஈட்டும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.  இதில் முதற்கட்டமாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் வீதம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து இலவசமாக வண்டல் மண் அள்ளிக்கொள்ள பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி வைகை அணை நீர் தேக்கப் பகுதியில் இரண்டு இடங்களில் நேற்று முதல் மண் அள்ளும் பணி தொடங்கிய நிலையில், விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் தவறாகப் பயன்படுத்திச் சிலர் செங்கல் சூளை உள்ளிட்ட வணிக நோக்கங்களுக்காக மண்ணைக் கடத்துவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மண் அள்ளும் இடத்தை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த,  பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வாகனங்களை மக்கள் சிறைபிடித்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். 







மேலும் அந்த இடத்தில் மண் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர். அதே நேரத்தில் குன்னூர் பகுதியில் வைகை அணை நீர் தேக்கப் பகுதிக்குள் மண் அள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வைகை அணை நிறுத்திக்க பகுதிக்குள் அள்ளப்படும் வணிக பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்பட்டால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.