*உலக பழங்குடியினர் தின விழா 2025*
ஆகஸ்ட் 9 உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அரசு அருங்காட்சியகம் மதுரை தேனி, திண்டுக்கல் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரி, திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரி ஆகிய இணைந்து 9. 8. 2025 மற்றும் 10. 8 .2025 ஆகிய இரண்டு நாட்கள் உலக பழங்குடியினர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் வாழுகின்ற பழங்குடி இனக்குழுமக்கள் பங்கேற்று தங்கள் வாழ்வியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கலை நிகழ்ச்சிகளாக நிகழ்த்தி காட்டினர். கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் பெருந்திரளாகப் பங்கேற்ற நிகழ்வில், தேனி மாவட்டம் வருசநாடு பகுதிகளிலிருந்து கடமலைக்குண்டு, உப்புத்துறை, தாழையூத்து போன்ற ஊர்களில் வசிக்கும் சுமார் 100 பழங்குடியின பளியர் இன மக்கள் கலந்து கொண்டனர். தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை புடைத்தல் போன்ற வாழ்வியல் முறைகளை பாடல் மற்றும் ஆடலுடன் நிகழ்த்தி காட்டினர். எதார்த்தமாக இருந்த கலை நிகழ்ச்சி பார்ப்போரை கவர்ந்தது.
*புகைப்பட கண்காட்சி*
உலக பழங்குடியினர் தின விழாவில் முக்கிய அங்கமாக புகைப்பட கண்காட்சி இருந்தது. பளியர் மக்கள் பயன்படுத்தும் மருத்துவ முறைகள், கிழங்கு அகழும் காட்சி, தேன் எடுக்கும் காட்சி, வழிபாட்டு முறை, குடியிருப்பு என பல்வேறு புகைப்படங்கள் அரங்கை அழகு செய்திருந்தன. புகைப்பட அரங்கில் வருசநாடு பகுதியில் வசிக்கும் பளியர் இன மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் புகைப்படங்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்ததோடு அதிக கவனத்தையும் பெற்றது.
புகைப்படங்களில் காணப்பட்ட வருசநாட்டு பகுதி பழங்குடியினர் அந்த விழாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அசலையும் நகலையும் பார்த்து பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.
*நிகழ்ச்சி ஏற்பாடு.*
இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பழங்குடி மக்களுக்கு உணவு, கழிப்பிடம், தங்கும் வசதி என அனைத்தும் மிகச் சிறப்பான முறையில் விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
*நிகழ்வு குறித்து கடமலைக்குண்டு பளியர் காலணியைச் சேர்ந்த கரடிப்பாண்டி கூறுகையில்*
இரண்டு நாள் நிகழ்வில் எங்களைப் போன்ற பல்வேறு பழங்குடி மக்களை சந்திக்க நல்ல வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது. எங்கள் தேவைகளை அமைச்சரை சந்தித்து மனுவாக கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு நாளும் எங்கள் மக்கள் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தனர் என்றார்.
*மாணிக்கம் என்பவர் கூறும் போது.*
கல்லையும் மண்ணையும் மரங்களையும் பார்த்து திரிந்த எங்களுக்கு இந்த இரண்டு நாள் வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பனங்குடியின மக்களை அரசாங்கம் எந்த அளவுக்கு மதித்து கொண்டாடுகிறது என்பதையும் எங்களுக்காக அரசு திட்டங்கள் என்னென்ன இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டோம்.
புகைப்பட கண்காட்சிகள் எங்கள் புகைப்படங்களை மிகவும் அழகாக வைத்திருந்தனர் புகைப்படத்தோடு எங்களை ஒப்பிட்டு பலர் போட்டோ எடுத்துக் கொண்டது வித்தியாசமான அனுபவத்தை எங்களுக்கு தந்தது என்றார்.
*உப்புத்துறை வேலுச்சாமி கூறும்போது.*
பெரும் பெரும் அமைச்சர்களும் கல்வியாளர்களும் அரசு அலுவலர்களும் அமைந்திருந்த மேடையில் எங்களை அமர வைத்து பேச வைத்தது மறக்க முடியாத அனுபவம். மேடையில் நாங்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த விழாவிற்காக எங்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று எங்களுடனே இருந்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி பாதுகாப்பாக வீடு வந்து சேர்த்த கடமலைக்குண்டு தமிழ் ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு எங்கள் அனைவரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
*ஆசிரியர் செல்வம் கூறும்போது.*
இரண்டு நாள் நிகழ்வில் எங்கள் பகுதி பழங்குடி மக்களோடு இருந்தது மிகச்சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். பழங்குடிகள் பற்றி புதிய புரிதலையும் புதிய பார்வையும் இந்நிகழ்வு எனக்குள் ஏற்படுத்தியது. இந்த விழாவிற்காக இவர்களை ஒருங்கிணைப்பதில் ஆரம்பத்தில் சிறு சிறு சிரமங்கள் இருந்தாலும் அடுத்தடுத்த கட்டங்களில் ஒழுங்கைமைவும் ஒத்துழைப்பும் என்னை ஆச்சரியம் கொள்ள வைத்தது, முடிவில் அவர்களை பிரிவதற்கு மனம் வரவில்லை. மனிதர்களில் மிகவும் அற்புதங்கள் நிறைந்தவர்கள் நம் பகுதி பழங்குடியினர். நாம் பகுதியை காக்கும் இவர்களை காப்பது நம் அனைவரின் கடமை எனக் கூறினார்.




