ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியில் உள்ள வளர் கல்வி மையம் செப்பனிட்டு திறக்கப்படுமா?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி ஊராட்சியை சேர்ந்த முத்தனம்பட்டியில் கலந்த பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் நூலகத்தை (வளர்கல்வி மையம்) திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்தனம் பட்டியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கே அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளூரில் உள்ள மாணவர்களும் ஏராளமாக படித்து வருகின்றனர். மாணவர்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2000 - 2001 ஆம் ஆண்டில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வளர்கல்வி மைய கட்டிடம் கட்டப்பட்டு, அதில் நூலகம் செயல்பட்டு வந்தது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில் கட்டிடம் சிதலமடைந்து மூடு விழா கண்டது. இந்நிலையில் மீண்டும் மாணவர்கள் பயன்படும் வகையில் நூலக கட்டிடத்தை செப்பனிட்டு திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டம் நிர்வாகம் கண்டு கொள்ளுமா ?

