வருசநாடு அருகே அரசரடி மலை கிராம பொதுமக்களிடம் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பேச்சுவார்த்தை.
வருசநாடு அருகே அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சி ஓடை ஆகிய மலைக்கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் நாடாளு மன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்டினர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அரசரடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இந்த நிலையில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அரசரடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் அளித்து செல்கின்றனர். ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே உறுதியான நடவடிக்கை எடுத்த பின்னரே தேர்தல் புறக்கணிப்பு முடிவை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய எம்.எல்.ஏ நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக தார் சாலை குடிநீர் உள்ளிட்ட எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். விரைவில் சாதகமான தீர்ப்பு வரும் அதன் பின்னர் கிராமங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் தொடர் முயற்சியின் காரணமாக தற்போது அரசரடி அரசு ஆரம்பப் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் பிரச்சனை சில நாட்களில் தீர்வுக்கு வரும் என தெரிவித்தார். இதைடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக மறுபரிசீலனை செய்து முடிவு அறிவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது திமுக மாவட்ட துணை செயலாளர் மலைச்சாமி , திமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், எஸ் ஐ சரவணன் ராமசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.




