தேனி மாவட்டத்தில் தேர்தல் முன்னிட்டுஅரசியல் கட்சி / வேட்பாளர்கள் ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு
தேனி மாவட்டம்
பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் ஊடகங்கள், நாளிதழ்கள், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் /வேட்பாளர்கள் /கட்சி சார்ந்த நிறுவனங்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சி, உள்ளுர் கேபிள், திரையரங்குகள், எப்.எம், பொது இடங்களில் வாகனங்கள் மூலம் ஒலி-ஒளி பிரச்சாரம், மின்னணு பத்திரிக்கைகள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி விளம்பரங்கள், சமூக ஊடகங்கள், இணையதளங்கள், மொத்த குறுஞ்செய்திகள், IVRS அழைப்புகள் போன்ற பல்வேறு விதமான வகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளுவதற்கு முன்பு இதற்கென மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இயங்கும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
1. வேட்பாளரின் பெயர், முகவரி, அவர் சார்ந்த கட்சி, அலைபேசி எண், சமூக ஊடக அடையாள எண்
2. அரசியல் கட்சி எனில் கட்சியின் பெயர், பொறுப்பாளரின் பெயர் மற்றும் முகவரி, அலைபேசி எண்
3. வெளியிடப்படும் பிரச்சாரத்தின் மாதிரி
4. குறுஞ்செய்திகளின் மாதிரி
5. பதிவு செய்யப்பட்ட ஒலி/ஒளி தொகுப்புகள்
6. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள மாதிரிகள்
7. தோராயமாக எத்தனை வாக்காளர்களுக்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
8. இதற்கான செலவின விவரங்கள்
மேலும் சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையே வெறுப்பையும் துவேசத்தையும் தூண்டுகிற குறிப்புகள் இடம் பெற கூடாது. மேலும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்ற கட்சியின் தலைவர்கள் தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, பொது நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விவரங்கள் பற்றியோ விமர்சனங்கள் இடம் பெற கூடாது. ஆட்சேபனையான விவரங்கள் இடம் பெற கூடாது. அவ்வாறு இருப்பின் தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி இல்லாமல் ஊடகங்களில் எவ்வித பிரச்சாரங்களும் செய்ய கூடாது என்றும் அவ்வாறு பிரச்சாரம் செய்வது குழுவில் கண்டறியப்பட்டால் செலவு தொகை வேட்பாளரின் செலவுத்தொகையில் வரவு வைக்கப்படுவதோடு தேர்தல் நடத்தை விதிகளில் கீழ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
மேலும், சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய செய்திகளை பிரச்சாரங்களாக மேற்கொண்டால் அல்லது அவர்களது அலைபேசிக்கு ஆட்சேபனையான குறுங்செய்தி/பதிவு செய்யப்பட்ட அலைப்புகள் வந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.
1. 93638 73078 (வாட்ஸ்ஆப்)
2. 04546-261730 (தொலைபேசி)


