மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சுற்றித்திரிந்த பெண் மனநல காப்பகத்தில் சேர்ப்பு
ஆண்டிபட்டி, டிச.10 -
ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே மனநலம் பாதித்து கிழிந்த ஆடையுடன் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பொது சுகாதாரத்துறை நோய் தடுப்பு பிரிவு சென்னை அலுவலகத்தில் இருந்து தேனிக்கு தடுப்பூசித்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த இணை இயக்குனர்கள் ஆய்வுக்கு வந்திருந்தனர்.
ஆய்வு முடித்து திரும்பிச் சென்ற போது ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே மனநலம் பாதிக்கப்பட்டு அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்த பெண் குறித்து தேனி துணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் படி ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் ஆண்டிபட்டி பெண் காவலர் உதவியுடன் மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு, மாற்று உடை அணிவித்து தேனி என்.ஆர்.டி.,அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து விட்டுள்ளார்.


