நடிகர் விவேக் பிறந்தநாள்: உத்தமபாளையம் மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் & விழிப்புணர்வு!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நகைச்சுவை நடிகர் விவேக் பல்வேறு இடங்களில் மரங்களை நடவு செய்து சமூகப் பணிகளை ஆற்றி வந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னரும், ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், அப்துல் கலாம் மற்றும் விவேக் ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களை ஒட்டி, மரங்களை நடுதல் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதேபோல், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் அமைந்துள்ள தேனி பனானா டிரேடிங் நிறுவனம் சார்பில், நடிகர் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
தேனி பனானா டிரேடிங் நிறுவனத்தின் தலைவர் சரவணன் அவர்கள், திசு வாழைக்கன்றுகள், பூச்செடிகள், மற்றும் மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்து வருகிறார். இவர் நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர் ஆவார்.
மாணவர்களுக்குப் பசுமைப் பரிசு:
நவம்பர் 19 அன்று, நடிகர் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் சரவணன் சிறப்பித்தார்.
தேனி பனானா டிரேடிங் நிறுவனத் தலைவர் சரவணன் பேசுகையில், "நடிகர் விவேக் மரக்கன்று நடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். சுத்தமான காற்று, சுகாதாரமான வாழ்க்கை வாழ மருத்துவ குணம் கொண்ட மரங்களை வளர்த்தவர். இதனால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் கொடுத்து, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்கள்:
இந்த நிகழ்வில், நடிகர் சங்க உறுப்பினரான திருப்பதி ராஜ் அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியரும் விவசாயியுமான பாண்டியன் கலந்து கொண்டு, நடிகர் விவேக்கின் வாழ்க்கை வரலாறு பற்றி மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வேல்முருகன், விவசாயி முபாரக் அலி மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





