கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி, லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில், இன்று (15.01.2024) ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 183-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசியதாவது,
தமிழ்நாடு வரலாற்றில் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பெற்றுள்ள பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழ்நாடு செழிப்பதற்கு காரணமாக அமைந்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக் முல்லை ஆறு மற்றும் பெரியாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக சென்று வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கவும், வறண்ட பகுதிகளாக இருந்த தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், விவசாயத்தை பெருக்கவும்,
தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்யவதற்காகவும் முல்லை பெரியாறு அணையை பென்னிகுவிக் கட்டினார்.தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து மேற்கு நோக்கி பாயும் முல்லை பெரியாறு நதியை கிழக்கே திரும்ப வைத்து கள்ளிகாடுகளை நெல் விளையும் கழனிகளாக மாற்றினார். தென் மாவட்ட மக்களின் கடவுளாக திகழும் பென்னிகுவிக்கின் 183-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, இன்றைய தினம் கர்னல் ஜான்பென்னிகுவிக் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் கருதப்படுகின்றனர். விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இலவச மின்சாரம், விவசாயக்கடன் தள்ளுபடி என பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியினை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பல்வேறு நலத்திட்டங்களையும் மற்றும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றம் ரொக்கமாக ரூ.1000/- வழங்கியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு விவசாயித்திற்கும், விவசாயிகளுக்கும் தேவையானவற்றை அறிந்து, அதனை உடனடியாக செயல்படுத்தி வருகிறது.
தேனி மாவட்டம் இயற்கை சூழல் மிகுந்ததாக உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். பசுமை மிகுந்த மாவட்டமாக என்றும் தேனி மாவட்டத்தை கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, விவசாயிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் உடனடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து தரப்படும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
மேலும், இவ்விழாவில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலிகுண்டு, கிட்டி, மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம், போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டாம், தேவராட்டம், கரகாட்டம், கிழவன்கிழவி, மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.
பென்னிகுயிக் அவர்களின் 183-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மொத்தம் 183 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வெளிநாட்டினர் கலந்து கொண்டு இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
இவ்விழாவில், காவல் துணை கண்காணிப்பாளர் மதுகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, கூடலூர் நகர்மன்றத்தலைவர் பத்மாவதிலோகந்துரை, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இன்பென்ட் பனிமயாஜெப்ரின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலெட்சுமி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், செயற்பொறியாளர் அன்புசெல்வன், உதவி செயற்பொறியாளர் மயில்வாகனம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








