தேனி அருகே பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு செய்ய ஆட்சியர்
தேனி பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினைமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் 33.தேனி பாராளுமன்ற தொகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இன்று (21.03.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 190.சோழவந்தான், 197.உசிலம்பட்டி, 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201.கம்பம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக வைப்பதற்கான அறைகள், வாக்கு எண்ணுவதற்கான அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், செய்தியாளர் அறைகள், பார்வையாளர்கள் அறைகள் என பல்வேறு அறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய அடிப்படை வசதிகளான தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தவும், தேவையான குடிநீர் வசதி, போதுமான கழிப்பறை வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்திடவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமாதவன் (பெரியகுளம்), தாட்சாயினி (உத்தமபாளையம்), உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரகாஷ், உதவி செயற் பொறியாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


