ஆண்டிபட்டி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 323 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம்(மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில் இன்று (10.02.2024) வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றால்தான் தமிழ்நாடு தொழில்துறையில் வளர்ச்சி பெறும் என்பதை நன்கு அறிந்து தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இந்தாண்டு மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பெரியகுளம் மேரிமாதா கலை அறிவியல் கல்லூரியிலும், கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 89 தனியார்துறை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வேலைநாடுனர்கள் அனைவரும் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியும். இங்கு பணிநியமன ஆணைகள் பெற்று அந்த நிறுவனத்திற்கு பணிக்கு செல்பவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
மேலும், பணிபுரியும் நிறுவனங்களில் ஏதேனும் இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். பணிபுரியும் இடங்களிலிருந்து மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட பல்வேறு அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 54 நபர்கள் அரசுத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்றி வருகிறார்கள்
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் 85 நபர்கள் இலவசமாக சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில், பயில விருப்பமுள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பேசினார்.
இன்று நடைபெற்ற முகாமில் 1037 வேலைநாடுனர்களும் 8 மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்தனர். அவர்களில் 321 நபர்களுக்கும் 2 மாற்றத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு 168 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 72 நபர்கள் திறன்பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.நாராயணமூர்த்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜாராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



