100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்டம்
பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், என்.ஆர்.டி நகர் பகுதியில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், மாற்றத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர்களின் வீடுகளுக்கு மேள தாளத்துடன் சென்று அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா (28.03.2024) தொடங்கி வைத்தார்.
33.தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக தொடர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குப்பதிவான இடங்களை தேர்வு செய்து, அந்த பகுதியில் வாக்குப்பதிவினை அதிகரிப்பதற்காக இளம் வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், பொதுமக்கள் என அனைவரையும் விட்டுவிடாமல் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில் தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்குடன் வாக்குப்பதிவில் பங்கேற்பதற்கான தேர்தல் அழைப்பிதழை வழங்கி, தேர்தல் திருவிழாவில் பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப.., அவர்கள் வாக்குப்பதிவினை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன், மகளிர் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



