தேனி அருகே பழங்குடியினர் கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது
தேனி மாவட்டம்
பழங்குடியினர் கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கூடலூர் நகராட்சி, பளியன்குடி கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.03.2024) நடைபெற்றது.
33.தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக தொடர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தின் கடைகோடி பகுதியான பளியன்குடி கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். ஒரு வாக்காளரும் விட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த பகுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று, விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பழங்குடியினர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தயாரிக்கப்பட்ட ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மின்னணு திரை வாகனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின மக்களுடன் தரையில் அமர்ந்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு சென்று 100% வாக்களிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று வாக்குப்பதிவில் பங்கேற்பதற்கான தேர்தல் அழைப்பிதழ் மற்றும் துண்டுபிரசுரங்களை வாக்காளர்களிடம் வழங்கி, தேர்தல் திருவிழாவில் பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பழங்குடியின பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்போம் என்ற தேர்தல் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி தாட்சாயினி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.ரூபன் சங்கர் ராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) திரு.எம்.எஸ்.மகாகிருஷ்ணன், கூடலூர் நகராட்சி ஆணையாளர் திருமதி காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




